மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது
மதுரையில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனையின் பேரில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று மதுரை கட்டபொம்மன் நகர், குதிரை பாலம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளுடன் வந்த 6 பேரை பிடித்து சோதனை செய்தனர். மேலும் அவர்களிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடைகளை பிரித்து பார்த்தனர்.
அதில் 2 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ.10 ஆயிரத்து 450 ரொக்கம் இருப்பது கண்டறிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மீனாம்பாள்புரம், காமராஜர் தெரு சேதுபதி (29), கார்த்திக் (25), மகாலிங்கம் மகன் பரத் (24), சேதுபதி மனைவி ரம்யா (22), பவளவல்லி (45) செல்லூர் பிரபு மனைவி சசிகலா (38) என்பது தெரிய வந்தது.
இதில் பவளவல்லி, சேதுபதி, ரம்யா ஆகிய 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பவளவள்ளியின் மகனான சேதுபதியின் மனைவி ரம்யா ஆவார். மேற்கண்ட 3 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கூட்டு சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.