மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏடிகாலனி கண்ணப்பன் நகர் இருக்கிறது. இங்கு சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவசுப்பிரமயம் என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. அவரது வீட்டைச் சுற்றி 10 அடிக்கு கருங்கற்களால சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இதை 15 அடியாக உயர்த்தி சுற்றுச்சுவரை ஆறுமுகம் கட்டியுள்ளார். அவர்களின் வீட்டில் இருந்து தாழ்வான பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை சிவசுப்பிரமணியம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று வீடுகளில் குடியிருந்த நான்கு குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர் என 17 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மேற்கு மாவட்டக் காவல் துறைத் தலைவர் பெரியய்யா, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ சின்ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும் அந்தப் பகுதி மக்களையும் சமாதனப்படுத்தவில்லை. `17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சிவசுப்பிரமணியத்தை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இறந்த 17 பேரின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும், வீடு கட்டித் தர வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அந்தப் பகுதி மக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், பிரேதப் பரிசோதனை செய்தும், உடல்களை ஒப்படைக்க முடியாதநிலை ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை பிணவறையில், சடலங்களை வைக்க இடம் இல்லாமல் மழையில் நனைந்தபடி வைக்கும் அவலம் ஏற்பட்டது.
ஒருபக்கம் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் என்று முக்கிய இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
சிவசுப்பிரமணியம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டம் கலைந்த பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கையெழுத்து வாங்கி சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மேட்டுப்பாளையம் வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல உள்ளார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மேட்டுப்பாளையம் வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல உள்ளார். அதேபோல, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் நாளை மேட்டுப்பாளையம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்