மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம்
மதுரை மாநகராட்சியின் 2-வது மண்டலத்தை உள்ளடக்கிய விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பி.பி.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே. நகர் மெயின் ரோடு, அண்ணா நகர் மெயின் ரோடு, சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியா புரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் நூற்றுக்க ணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 500-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கரிசல்குளத்தில் உள்ள மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக நாளை மாநகராட்சியில் உயர்மட்ட அதிகாரிகளின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனம் காண்ட்ராக்ட் எடுத்திருந்தது. அதன்படி தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். மேலும் வேலை பார்ப்பதற்கு சரியான ஊதியம் மற்றும் இ.எஸ்.ஐ., பி.எப்.ஆகிய வற்றிற்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணம் செலுத்தாமல் இருந்தது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மண்டலம் 2-ல் தூய்மை பணியில் ஈடுபட தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது. தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும், மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் தொகுப்பு ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்டவை பிடித்தம் செய்ய வேண்டும், 18 வருடமாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாநகராட்சி அனைத்து மண்டலங்களிலும் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.
முன்னதாக நடந்த போராட்டத்தை முன்னிட்டு காவல் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார் மற்றும் ஆயுதப்படை போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.