ரூ.20 லட்சம் கடன் தர்றோம்; ரூ.85,000 முன்பணம்! – நீலகிரியை அதிரவைத்த பொள்ளாச்சிப் பெண்ணின் மோசடி`வீடு கட்ட ரூ.20 லட்சம் கடன் வழங்குகிறோம். முன்பணமாக 85,000 ரூபாய் தாங்க’ என்று கூறி போலி ட்ரஸ்ட் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பொள்ளாச்சிப் பெண்ணை ஊட்டி போலீஸார் கைது செய்தனர்.
வீடு கட்ட கடன் தருகிறோம் அதற்கு முன்பணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை செலுத்துங்கள் எனப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிலர் புகாரளித்தனர்.இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர் விசாரணையைக் குற்றப் பிரிவிற்கு மாற்றம் செய்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு டி.எஸ்.பி சுப்பிரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.தொடர் விசாரணையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரூபினிபிரியா (29) என்ற பெண், போலியான அறக்கட்டளை பெயரில் கடன் தருவதாகக் கூறி, பணம் வசூலித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் ரூபினி பிரியாவைக் கைது செய்தனர்.ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல இடங்களில் மோசடிகளில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.இந்த மோசடி குறித்து காவல்துறையினர் கூறுகையில், “பொள்ளாச்சியைச் சேர்ந்த ரூபினிபிரியா என்ற பெண், போலியான டிரஸ்ட் நடத்தி நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். கோவையைச் சேர்ந்த சிவா, கார்த்திக் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் மூலம் ஏஜென்ட்களை நியமித்து, வீடுகட்ட கடன் தருவதாகக் கூறி 65 பேரிடம் ரூ.18 லட்சம் வரை முன்பணம் வசூலித்து அவர் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் தொடர்புடைய சிவா என்பவர் வேறு வழக்கில் சிறையில் உள்ள நிலையில் தலைமறைவாக உள்ள கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோரைத் தேடி வருகிறோம். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இவர்கள் வேறு வேறு பெயர்களில் போலியாக டிரஸ்ட் வைத்திருப்பதாகக் கூறி பணம் வசூலித்து ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது” என்றனர்.மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பாதிக்கப்பட்டவர்கள ஊட்டியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு குவிந்தனர். நீதிமன்றத்தை நாடுமாறு கூறி அவர்களை போலீஸார் அனுப்பி வைத்தனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்: திரு சந்தோஷ் அம்பத்தூர்