காவலர் கணவருடன் சென்று கடைகளில் கையூட்டு வாங்கிய பெண் ஆய்வாளர்: இருவரையும் பணியிடை நீக்கம் செய்த டிஐஜி…!
கரோனா பணியில் காவல்துறையினர் சிறப்பாகப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுவரும் நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஸ்ரீபிரியா கடைகளில் மாமூல் கேட்டு வாங்கியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஸ்ரீபிரியாவுக்கு சீர்காழி பகுதியில் கரோனா பாதித்தவர்கள் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இவரின் கணவர் சோமசுந்தரம் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் நிலையில் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்.இந்நிலையில், ஆய்வாளர் ஸ்ரீபிரியா கடந்த 11 மற்றும் 12 -ம் தேதிகளில் சீருடையில் தனது சொந்தக் காரில் கணவர் சோமசுந்தரத்துடன் சென்று சீர்காழி தென் பாதியில் உள்ள மளிகைக் கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.அத்துடன், திருவெண்காடு காவல் சரகத்துக்கு உட்பட்ட மங்கைமடம் சென்று அங்குள்ள மருந்துக்கடை ஒன்றில் தனது கணவர் மூலமாக 2,000 ரூபாய் வாங்கியிருக்கிறார். அதன் அருகிலுள்ள மளிகைக் கடைகள் மற்றும் பூக்கடைகளிலும் ஸ்ரீபிரியா மிரட்டிப் பணம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் கவனித்த பொதுமக்கள் சமூக ஊடகங்களில் இதைச் செய்தியாகப் பகிர்ந்து கொண்டனர். உடனே, இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்ட தஞ்சை சரக டி ஐஜியான லோகநாதன், விசாரணையில் பெண் ஆய்வாளர் ஸ்ரீபிரியாவும், அவரது கணவ சோமசுந்தரமும் தவறு செய்திருப்பது உறுதியானதால் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.