


செயின் பறிப்பு குற்றவாளியை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்
தாம்பரம் மாநகர காவல் சேலையூர் சரகம் சிட்லப்பாக்கம் காவல் நிலைய MIT கல்லூரி பாலம் சர்வீஸ் சாலையில் 17.09.2024-ம் தேதி காலை சுமார் 06.45 மணியளவில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த திருமதி பு. சாந்தகுமாரி வ/69 க/பெ கோபாலகிருஷ்ணன் என்பவரிடமிருந்து சுமார் 5 சவரன் தங்க செயினையும் மேலும் 22.09.2024 -ம் தேதி பகல் சுமார் 03.45 மணிக்கு திருமதி சாந்தி வ/ 57 க/பெ சண்முகம் என்பவர் கழுத்தில் இருந்து சுமார் 4.1/2 சவரன் தங்கச் செயினையும் இருசக்கர வாகனத்தில்(Pulsar) வந்து அறுத்துச் சென்ற இவ்விரு வழக்கிலும் சிட்லபாக்கம் காவல் நிலைய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கை துரிதமாகவும் தீவிரமாகவும் விசாரிக்க கனம் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஆலோசனையின் படி சேலையூர் சரக உதவி ஆணையர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் சிட்லபாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் தனி படையினர் இவ்விரு சம்பவ இடங்களில் இருந்து தொடர்ந்து சேகரிக்கப்பட்ட CCTV பதிவுகளை கொண்டு எதிரி சென்ற வழித்தடங்களான பல்லாவரம் குன்றத்தூர் காஞ்சிபுரம் காவேரிப்பாக்கம் வாலாஜா ஆற்காடு வேலூர் ஆகிய வழித்தடங்களில் உள்ள சுமார் 2000 திற்கும் மேற்பட்ட CCTV பதிவுகளில் கிடைத்த தகவலின் பேரில் வேலூர் வரை சென்று திரும்ப சென்னை நோக்கி வந்த மர்ம நபரை சுமார் 350 கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து பூந்தமல்லி மதுரவாயல் புழல் மாதாவரம் பெரம்பூர் ஆகிய பகுதியில் உள்ள CCTV பதிவுகளின் கிடைத்த தரவுகளில் எதிரியை மாதாவரம் பேருந்து நிலையத்தில் வைத்து இன்று 02.10.2024 ம் தேதி சிட்லபாக்கம் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து குற்றவாளியான சசி வ/52 த/பெ குஞ்சுகுட்டி கொச்சவழியத்து பனையல் வீடு பெரிய நாடு அஞ்சல் திருகடவூர் கிராமம் அஞ்சலி மூடு கொல்லம் கேரள மாநிலம் என்பவரை கைது செய்து விசாரிக்க இவர் மீது 1995 முதல் 2000 வரை டேவிட் பிஜூ என்ற பெயரில் குரோம்பேட்டை பல்லாவரம் சங்கர் நகர் பூந்தமல்லி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்ததும் மேலும் 2000 முதல் 2019 வரை கேரள மாநிலம் கொல்லும் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் சுமார் 25 மேற்பட்ட சங்கிலி பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளதும் தற்போது தாம்பரம் சிட்லபாக்கம் பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வருகிறது.
மேற்படி விசாரணைக்கு பின்னர் எதிரியை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.CCTV கேமரா பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து குற்றவாளியை மிக துரிதமாகவும் திறமையாகவும் கைது செய்த சேலையூர் சரகம் சிட்லபாக்கம் காவல் நிலைய தனிப்படை ஆளினர்களை தாம்பரம் காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்கள்.





