Police Department News

தப்பிய கைதியை ட்ரோன் மூலம் தேடிய காவல்துறை..!! முடிவுக்கு வந்த 14 மணிநேர பதற்றம்..!!

தப்பிய கைதியை ட்ரோன் மூலம் தேடிய காவல்துறை..!! முடிவுக்கு வந்த 14 மணிநேர பதற்றம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் மகளான 7 வயதுச் சிறுமி, பூ வியாபாரி ராஜா என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததால், ராஜா மீது போலீஸார் போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 3-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான மருத்துவ பரிசோதனைக்காக, சிறையிலிருந்த ராஜா புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ராஜாவை முருகையன், கோகுலகுமார் என்ற இரண்டு காவலர்கள் அழைத்து வந்திருந்தனர்.

பரிசோதனை முடிந்து அதன் முடிவுக்காக காவலர்கள் பாதுகாப்பில் ராஜா அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார். பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில் போலீஸாருக்குப் போக்கு காட்டி அங்கிருந்து தப்பித்த ராஜா மருத்துவமனைக்கு வந்த வெளிநோயாளிகளுடன், நோயாளியாக ஓட்டம் பிடித்தார். குற்றவாளியைக் கோட்டைவிட்ட காவலர்கள் அங்கும் இங்கும் அலைந்து தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணனுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குற்றவாளியைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகளை உடனே அமைத்து உத்தரவிட்டார்.

மருத்துவமனையைச் சுற்றிலும் வனப்பகுதி என்பதால், தனிப்படை போலீஸாருடன் மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடனும் தேடும் பணி நடைபெற்றது. மேலும், முள்ளூர், ராஜாபட்டி, கரையாம்பட்டி, இச்சடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே குற்றவாளி தப்பித்துச் செல்லும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததாகக் காவலர்கள் முருகையன், கோகுல்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார்.

ஏற்கெனவே குற்றவாளி ராஜா மீது போலீஸார் 7 வழக்குகள் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது தப்பியோடியதால், மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். போலீஸார் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தேடிக்கொண்டிருந்த வேலையில், குற்றவாளி ராஜாவை மருத்துவமனை வளாகத்துக்குள், மருத்துவமனை ஊழியர் ஒருவர் பார்த்ததாகக் கூறியதால், மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தொடர் தேடுதலில் ஈடுபட்டனர். இரவும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

சுமார் 14 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு நள்ளிரவு தஞ்சாவூர் சிட்கோ சாலை அருகே ராஜாவை இரண்டு காவலர்கள் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளதாகப் போலீஸார் கூறியுள்ளனர். போலீஸார் ராஜாவை தங்கள் கஷ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டையில் மருத்துவ பரிசோதனைக்காகக் கைதி தப்பித்துச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி மாவட்ட எஸ்.பி கூறியதாவது, “குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீஸார் சிறப்பாக வேலை செய்தனர். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். குற்றவாளிக்கு உரிய தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும். அந்தச் சிறுமியின் மரணத்துக்கும் நீதி கிடைக்கும். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.