திருப்பூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (34). இவருடைய மனைவி விஷ்ணுதேவி (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 2½ வயதில் ஒரு மகனும் உள்ள னர். சதீஸ்குமார் திருப்பூர் சாமுண்டிபுரம் திருநீலகண்டர் வீதியில் குடும்பத்துடன் தங்கி, திருப்பூர் மாநகர மதுவிலக்கு பிரிவில் காவலராக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் பொங்கல்பண்டிகைக்கு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல சதீஸ்குமார் முடிவு செய்தார். அப்போது, விஷ்ணுதேவி தன்னுடைய தாய் வீட்டுக்கு முதலில் சென்றுவிட்டு, பின்னர் உங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சதீஸ்குமார், முதலில் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு, பின்னர் உன் தாய் வீட்டுக்கு போகலாம் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக கடந்த 13-ந்தேதி இரவு கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதால், இருவரும் பொங்கலுக்கு சொந்த ஊருக்கே செல்லவேண்டாம் என்று முடிவுசெய்தனர்.
இதைதொடர்ந்து சதீஸ்குமார் வழக்கம் போல் தூங்குவதற்காக, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஷ்ணுதேவி கதவை தட்டி, சதீஸ்குமாரை கூப்பிட்டு உள்ளார். ஆனால் எந்த பதிலும் வராததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சதீஸ்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார்
இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுதேவி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த 15 வேலம்பாளையம் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து சதீஸ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு மாமியார் வீட்டிற்கு செல்வதா? பெற்றோர் வீட்டிற்கு செல்வதா? என்று மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனஉளைச்சல் ஏற்பட்டு காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.