
வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆப்பு
ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு மாதத்துக்கு ஒட்டுமொத்தமாக 10 மணி நேரத்துக்கும் மேலாக பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கும் திட்டத்தை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்காக வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன என்பது பற்றிய விவரங்களை, அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாமல் போனதற்கு வங்கிகள் அபராதம் செலுத்த வேண்டி இருந்தால், அந்த நிறுவங்களிடம் இருந்து தாங்கள் செலுத்திய அபராதத் தொகையை வங்கிகள் மீட்டுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏடிஎம்மில் பணம் உள்ளதா என்று வங்கிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களை இயக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் ஏடிஎம்மில் பணம் இல்லாத போது பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது
