
அரசு சம்பந்தமான மனுக்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது நமது தொடர்பு உலாப்பேசி எண்ணை குறிப்பிட வேண்டாம்
அரசு சம்பந்தமான மனுக்கள் எழுதும் போது சில சமயங்களில் நமது உலா பேசி எண்ணை கேட்கிறார்கள், நாமும் கொடுக்கிறோம். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து ‘‘நாங்கள் உங்களை அழைத்த போது, உங்களது உலாப்பேசி எண் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது’’ என்ற சட்டத்துக்கு விரோதமான காரணத்தை பதிவு செய்துவிட்டு, நம் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறார்கள்.
மனு எழுதும் பலரும் தற்போது தங்களது முகவரியில், தொடர்பு உலாப்பேசி எண்ணை சட்டப்படி குறிப்பிட வேண்டியதில்லை என்றாலுங்கூட ஏனோ குறிப்பிடுகிறார்கள். புதிதான இப்பழக்கம் தவறு என்பதோடு, நமக்கு பல வகையில் பிரச்சினைகளை உருவாக்கும்.
அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்த காரியமாக இருந்தாலும் அது எழுத்து மூலமாகத்தான் இருக்க வேண்டும். உலாப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தால் நிராகரிக்கப்பட்டதாக சொல்ல முடியாது என்பது உட்பட பல்வேறு சட்டக் கேள்விகளுக்கு அரசூழியர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும் என்றாலும் கூட, நாம் தொடர்பு எண்ணை குறிப்பிட்டதால், நமக்கு தேடி வரும் பின் விளைவிது.
குற்றம் நடைபெறாமல் தடுப்பதுதான் நம் கடமையே தவிர, குற்றம் நடந்தப்பின் அதற்கு நிவாரணம் தேடக் கூடாது.
அப்படி கட்டாயம் குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்தால் தொடர்பு எண்ணை தவிர்த்து, மின்னஞ்சல் முகவரியை தரவும். இதற்கு வசதி இல்லாதபோது, இணைய வழி விண்ணப்பத்தை தவிர்த்து, அஞ்சல் வழியில் செய்வதே நல்லது.
மற்றுமொரு சிறந்த வழியாக, மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, அதற்கு அனுப்பி வைப்பதும் மிகச் சிறந்தது.
