புலனாய்வு விசாரணையில் அசத்திய தமிழக போலீசார் 5 பேருக்கு உள்துறை அமைச்சக விருது.. 4 பேர் பெண்கள்..!
தமிழக காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் உள்துறை அமைச்சக விருது வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக புலனாய்வு விசாரணையை மேற்கொண்ட 151 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஐந்து அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இருந்து கூடுதல் எஸ்.பி கனகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி மற்றும் எஸ்.ஐ செல்வராஜன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி எஸ்.ஐ ராஜனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக விருது பெறும் 151 போலீஸ் அதிகாரிகளில், 15 பேர் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் தலா ஐந்து பேர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) மற்றும் தேசிய புலனாய்வு முகமையை (என்ஐஏ) சேர்ந்த அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெறும் 151 பேரில் 28 பெண் போலீசார் அடங்குவர். தமிழகத்தில் இருந்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பேரில் நான்கு பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.