மதுரையில் வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல்
மதுரையில் சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த 15-ந் தேதி வரை மதுரை யில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் சாலை விதிகளை மீறும் நபர் மீதான அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் ரூ.10 ஆயிரமும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். அதிவேகம் மற்றும் அதிக நபர்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் சாரை, சாரையாக இருசக்கர வாகனங்களை போலீசார் வழிமறித்து அபராதங்களை விதிப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 11 மாதத்தில் மட்டும் மதுரையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 338 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 831 பேர் அதிவேகமாக சென்றதாக வும், 1,407 பேர் குடிபோதையில் வாகனத்தை ஒட்டியதாகவும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 71 பேர் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாகவும், 4 ஆயிரத்து 960 பேர் அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றி சென்றதாகவும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக 15 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி மற்றும் தியாகி இமானுவேல்சேகரன், மருது பாண்டியர், தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக சென்ற வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டதையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 69 ஆயிரத்து 588 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 மாதத்தில் அதாவது ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் 15-ந் தேதி வரை மதுரையில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 கோடியே 3 லட்சம் அபராத தொகையாக வசூலித்து மதுரை போலீசார் சாதனை படைத்துள்ளனர்