
சட்டம் இயற்றுவது முற்றிலும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது: உச்ச நீதிமன்றம்
சட்ட ஆணையத்தை சட்டபூா்வ அமைப்பாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அது தொடா்பான உத்தரவில், ‘சட்டம் இயற்றுவது முற்றிலும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
21-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டுடன் நிறைவடைந்தது. அதற்குப் பிறகு நீண்ட நாள்களாக 22-ஆவது சட்ட ஆணையம் அமைக்கப்படாமலும், 21-ஆவது ஆணையத்துக்குக் காலநீட்டிப்பு வழங்கப்படாமலும் இருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் அஸ்வினிகுமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். அதில், 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி, மத்திய அரசு 22-ஆவது சட்ட ஆணையத்தை அமைத்தபோதிலும் அதன் தலைவரையும் உறுப்பினா்களையும் நியமிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தாா். அதைக் கருத்தில்கொண்டு 22-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினா்களையும் விரைந்து நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், சட்ட ஆணையத்தை சட்டப்பூா்வ அமைப்பாக மாற்றுவதற்கான சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றை இந்த விவகாரத்தில் ஒருதரப்பாக மனுதாரா் இணைத்திருந்தாா்.
மனு குறித்து மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் அளித்த விளக்கத்தில், சட்ட ஆணையத்தை சட்டப்பூா்வ அமைப்பாக மாற்றும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆஜரான மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, 22-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவரும் உறுப்பினா்களும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தாா்.
அதைக் குறித்துக் கொண்ட நீதிபதிகள், ’குறிப்பிட்ட விவகாரத்தில் சட்டத்தை இயற்றுமாறு நாடாளுமன்றத்துக்கு உத்தரவைப் பிறப்பிக்க முடியாது. சட்டம் இயற்றுவது முற்றிலும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது. அதைக் கருத்தில்கொண்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றனா்.
