மதுரை ஜெயிலில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள்
தென் தமிழகத்தில் மிகப்பெரிய ஜெயில்களில் ஒன்று மதுரை மத்திய ஜெயில் ஆகும். இங்கு 1,850 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பெண் கைதிகள் தனி சிறையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிறையில் இருக்கும் போது பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.
அதில் உணவு தயாரிப்பது, தையல், தறி நெய்தல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். பெண் கைதிகள் தயாரிப்பில் நெய்யப்படும் சுங்கடி சேலைகள் ஜெயில் பஜார் அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மதுரை ஜெயிலில் மகளிர் தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 35-க்கும் மேற்பட்ட ஜெயில் பெண் ஊழியர்கள், கைதிகள் நெய்த சுங்குடி சேலையை அணிந்து விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பெண் கைதிகள் ரசித்து பார்த்தனர்.
இந்த விழாவில் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன், ஜெயிலர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரி பழனிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.