திண்டுக்கல்
கொடைக்கானலில் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சென்னை வாலிபர் மரணம்- போலீசார் தீவிர விசாரணை
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வர் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்சர்வேட்டரி வனப்பகுதியில் உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் அப்பகுதியில் விறகு எடுக்க சென்ற பெண்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெகதீஸ்வரின் பெற்றோர் கொடைக்கானலுக்கு வந்தனர். போலீசார் விசாரணையில் ஜெகதீஸ்வரின் பெற்றோர் தங்கள் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தனர். அந்த கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்ததால் ஜெகதீஸ்வர் மன வேதனையில் இருந்துள்ளார். தனக்கும் நல்ல வேலை இல்லாததால் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். எனவே யாருக்கும் தெரியாமல் கொடைக்கானலில் வந்து மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி மோட்டார் சைக்கிளில் வந்த அவர் அப்சர்வேட்டரியில் தனது பைக்கில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆனால் அதற்குள் அங்கிருந்த பெண்கள் பார்த்து விடவே போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளார்.