Police Department News

10 பவுன் தங்க தாலி செயின் பறிப்பு – இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

10 பவுன் தங்க தாலி செயின் பறிப்பு – இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களிடம் பணத்தை பறித்து செல்லும் குற்றவாளிகள், பெண்களிடம் நகைகளை பறித்து செல்லும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த (25.03.23)-ம் தேதி கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம், சுந்தராஜ் நகரில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 10 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில்
இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (44) த.பெ.தியாகராஜன் மற்றும் குண்டூர் அய்யனார் நகரைச்சேர்ந்த புகழேந்தி (50) த.பெ.ரெத்தினவேல் ஆகியோர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில், எதிரிகள் புகழேந்தி மற்றும் செல்வராஜ் ஆகியோர் மீது திருச்சி மாநகரம் கே.கே.நகர் காவல்நிலையத்தில் அரசு பள்ளி பெண் ஆசிரியையிடம் தங்க செயினை பறித்ததாக ஒரு வழக்கும், ஏர்போர்ட் காவல் நிலையத்தில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் செயினை பறிக்க முயன்றதாக ஒரு வழக்கும், எதிரி செல்வராஜ் மீது திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் காவல் நிலையத்தில் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கிய வழக்கும் உட்பட 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, எதிரிகள் புகழேந்தி மற்றும் செல்வராஜ் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கே.கே.நகர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து,

திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதிசத்திய பிரியா, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.