திட்டக்குடி பகுதியில் 1800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது: 2 மினி வேன் பறிமுதல்
கடலூர்:
திட்டக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர்கள் முருகானந்தம், ராஜா, பவானி ஆகியோர் வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் முட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. 40 அரிசி முட்டைகளில் சுமார் 1080 கிலோ எடையுள்ள அரிசி இருந்தன.
இதேபோல் திட்டக்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதனை சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. 13 அரிசி மூட்டைகளில் சுமார் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து 2 மினி வேன் மற்றும் 1830 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 3 பேரை போலீசார் கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். வேப்பூர் கூட்ரோட்டில் பிடிபட்ட நபர்கள் திட்டக்குடி கோவிலூர் சேர்ந்த வீரமணி, ரவி,நெசலூர் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் என தெரிய வந்தது. மேலும் திட்டக்குடி பகுதியில் அரிசி பறிமுதல் செய்யும்போது டிரைவர் தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3பேரை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.