
ராஜபாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், ஆவரம்பட்டி அருகே அழகுத்தேவன் குளத்தைச் சோ்ந்த குருசாமி ராஜா மகன் சிவக்குமாா் (43). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்தாா்.
இந்த நிலையில், சிவக்குமாா் தனது இரண்டாவது மனைவி காளீஸ்வரி ( 23 ) மகன் குருசரன் ( 4) ஆகிய மூன்று பேரும் தெற்கு வெங்கநல்லூா் ஊராட்சி இ. எஸ். ஐ. குடியிருப்பு அருகேயுள்ள தனக்குச் சொந்தமான இடத்தை பாா்க்கச் சென்றாா். அப்போது 4 போ் அங்கு மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அவா்களை சிவக்குமாா் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமைடந்த 4 பேரும் சோ்ந்து சிவக்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சிவக்குமாா் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், கொலை செய்யப்பட்ட சிவக்குமாருக்கு ராஜபாளைம் பழைய பேருந்து நிலையம் எதிரில் இனிப்பகம் ஒன்று உள்ளது. இவருக்கு முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து வழக்கு நீதமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு, காளீஸ்வரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
