மதுரை அருகே காதலிக்க மறுத்ததால் திருமங்கலம் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற பஞ்சாலை தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(25). பத்தாம் வகுப்பு படித்துள்ள இவர் நடுவக்கோட்டை அருகே உள்ள திரளியில் இருக்கும் தனியார் பஞ்சாலையில் வேலை பார்க்கிறார்.
இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்துள்ளார். இந்த காதலை மாணவி ஏற்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கடந்த ஆண்டு பாலமுருகன் மீது திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில் பாலமுருகன் நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வெளியே வந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியின் உடல் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமங்கலம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீஸார் பாலமுருகனை நேற்று முன்தினம் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். கல்லுப்படடி அருகே கோபாலபுரம் மலையில் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு சென்ற போலீஸார் நேற்று காலை சுற்றி வளைத்து பாலமுருகனை பிடித்தனர்.
அவரது கைகளில் தீக்காயம் இருந்ததால் அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் போலீஸாரிடம் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவியை காதலித்தேன். அவர் ஏற்க மறுத்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் உட்பட பல்வேறு வகையில் எனக்கு ஓராண்டாக தொந்தரவு கொடுத்தனர். மாணவியும் என்னை ஏற்க மறுத்தார். இதனால் வேறு வழியின்றி அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றேன் என்றார்.