Police Department News

குற்ற வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் கைது.. கை ரேகையால் சிக்கியது எப்படி?

குற்ற வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் கைது.. கை ரேகையால் சிக்கியது எப்படி?

கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அவரது கைரேகையை கொண்டு 11 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைச்சாமி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டு போலீசார் ஆவணப்படுத்தினர். தொடர்ந்து வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது கைவிரல் ரேகை குறித்த நவீன மென்பொருளான National Automated Finger print Identification System – NAFIS காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மென்பொருளின் மூலம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பழைய வழக்குகளில் விரல் ரேகையை ஒப்பிட்டு பார்த்தபோது, ராமநாதபுரம் கடலாடி காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் சேவுகராஜ் என்பவருடைய விரல் ரேகையுடன் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது.
தற்போது முதுகுளத்தூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சேவுகராஜ், 2012 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நேற்று (பிப்.19) சம்பிரதாய கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து திருட்டுப் போன பொருட்களை மீட்கும் முயற்சியை மதுரை மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
பதிவான விரல் ரேகையின் அடிப்படையில், 11 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட குற்ற சம்பவ வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைவிரல் ரேகை மூலம் கண்டுபிடித்த வல்லுநர்களை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.