Police Recruitment

புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி- இளைஞரை கடத்திய 5 பேர் கைது

புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி- இளைஞரை கடத்திய 5 பேர் கைது

புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்தவரின் நண்பரை கடத்திய 5 பேரை அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கதிரவன், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (35), கோவிந்தராஜ் (36), சபியுல்லா (30), குட்டூரை சேர்ந்தவர் பிரபு (29), செம்படம்புத்தூரை சேர்ந்தவர் ராமசந்திரன் (36). இவர்கள் 5 பேரிடம் கதிரவன் புதையல் எடுத்து தருவதாக கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.35 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் புதையல் எடுத்து கொடுக்காமலும், ரூ.35 லட்சத்தை திருப்பி கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்த 5 பேரும் கதிரவனிடம் ரூ.35 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கதிரவனை தொடர்பு கொள்ள முடியாததால் பணம் கொடுத்த 5 பேரும் நேற்று திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் அண்ணாநகர் 2-வது வீதியில் வசிக்கும் கதிரவனின் நண்பரான பாலாஜி (33) என்பவரை பார்க்க சென்றனர். அப்போது அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கதிரவனிடம் இருந்து பணத்தை பெற பாலாஜியை கடத்த முடிவு செய்தனர். இதையடுத்து பாலாஜியை கடத்திக்கொண்டு 2 கார்களில் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருப்பூர் மாவட்ட போலீசார் ஈரோடு மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர். மேலும் கிருஷ்ணகிரிக்கு பவானி வழியாக செல்லக்கூடும் என்பதால் அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் அம்மாபேட்டை அருகே மேட்டூர் செல்லும் வழியில் உள்ள சின்னப்பள்ளம் சோதனைச்சாவடியில் வாகன சோதனை பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு காரில் திருமுருகன்பூண்டியில் கடத்தப்பட்ட பாலாஜியும், மற்றொரு காரில் அவரை கடத்திய சிவக்குமார், கோவிந்தராஜ், சபியுல்லா, பிரபு, ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து பாலாஜியை போலீசார் மீட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதையடுத்து இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதைத்தொடர்ந்து அம்மாபேட்டை வந்த திருமுருகன்பூண்டி போலீசாரிடம் கடத்தப்பட்ட பாலாஜி, அவரை கடத்திய 5 பேரும், 2 கார்களையும் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சபீனா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.