கொரோனா பாதிப்பு – சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய 9 காவல் துறையினருக்கு எஸ் பி ஜெயக்குமார், பழக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்குப் பின் குணமடைந்து பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 9 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம், தலைமைக் காவலர் முத்துபாண்டி, காவலர் தாமஸ் பால்ராஜ், திருச்செந்தூர் காவல் நிலைய காவலர் கார்த்திக்கேயன், தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் பெருமாள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 12வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர்கள் சதீஷ்குமார், ரமேஷ்குமார், முருகானந்தம், சீனி முகமது ஆகியோர் களப்பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
மேற்படி 9 காவல்துறையினருக்கு இன்று (14.07.2020) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி ‘கொரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள். அப்பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதனின்று மீண்டு வந்துள்ளீர்கள். சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது” என்று வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன் உடனிருந்தார்.