மதுரையில் கஞ்சா, மது விற்பனை; 29 பேர் கைது
மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் 2-வது தெருவைச் சேரந்த காஜா மைதீன் (40) என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.9,740 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்ற குற்றத்திற்காக காஜா மைதீனையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகமலை மேலக்குயில்குடியை சேர்ந்த முருகன் (54) என்பவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும், ரூ.14 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் 4-வது தெருவை சேர்ந்த திவ்யதர்ஷன் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை அவனியாபுரம், திருநகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு, அண்ணாநகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விறபணை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது மது விற்பனை செய்த 26 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.