சென்னை ஆர்.கே.நகரில், வாக்களித்தவர்களுக்கு பணம் கொடுக்க 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் 450 பேருக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக எழுதி வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகருக்கு உட்பட்ட கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகரில் தேர்தலுக்கு முன்னதாக சிலர் 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்ததாகவும், தேர்தல் முடிவு வந்தபின்னர் டோக்கன் கொடுத்தவர்களை மடக்கி பணம் கேட்டு சிலர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் தங்களுக்கு டோக்கன் கிடைக்க வில்லை என்று சிலர் அப்பகுதி தினகரன் ஆதரவு தேர்தல் பொறுப்பாளர்களிடம் கேட்டதாகவும் அப்போது தாங்கள் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பொறுப்பாளர்கள் என்றும் அடுத்த பகுதி பொறுப்பாளர்களிடம் கேட்குமாறு அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில் பணம் கேட்டவர்களை டிடிவி ஆதரவாளர்கள் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது டி.டி.வி. ஆதரவாளரும் பூத் பொறுப்பாளருமான ஜான் பீட்டர் என்பவரிடம் இருந்து ஒரு குறிப்பேடு கைப்பற்றப்பட்டதாகவும், அதில் 20 ரூபாய் டோக்கன் 450 பேருக்கு கொடுத்ததாக எழுதி வைக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டி.டி.வி. ஆதரவாளர்கள் ஜான் பீட்டர், சரண்ராஜ், செல்வம் மற்றும் ரவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்