மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிப்பு
மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிப்பு
நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் நவம்பர் 1 முதல் நவம்பர் 14 வரையில் குழந்தைகள் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதின் முக்கிய நோக்கமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர குற்றங்களை முற்றிலுமாக தடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒவ்வொரு கிராம பகுதியிலும் வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆபத்துக் காலத்தில் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசரஉதவி எண்களான, 100 (Palice), 181 (One Stop Center), 1091 (Women Help Desk) மற்றும் 1098 (Child Help Line) ஆகியவை குறித்து எடுத்துக் கூறியும் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதுமே ஆகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் மூலம் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் நவம்பர் 1 முதல் நவம்பர் 14ம் தேதி வரையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் சமுதாயத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு அனைவரையும் சென்றடையும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாத சமுதாயம் என்ற இலக்கை எட்டிடும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.01.11.2021 முதல் 05.112021 வரையில் 1601 கிராமங்களில் 64539 வீடுகளில் பொதுமக்களை சந்தித்து 1883 தன்னார்வலர்களின் உதவியுடன் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். மேலும் 1455 விழிப்புனார்வு முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் கலந்து கொண்ட 64765 பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.