
மேலூர் அருகே பெண் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த தம்பதி
மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்தவர் நதியா. இவர் மேலூரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் ரூ.21 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.வி. சாலா தெருவில் சென்றார்.
அப்போது அவர் வைத்திருந்த கைப்பை தவறி கீழே விழுந்து விட்டது. அதனை கவனிக்காமல் அவர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் பணம் கொடுப்பதற்காக பணப்பையை தேடினார். அப்போது அதனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நதியா தவறவிட்ட பணத்தை தேடி வந்தனர்.
இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அ.வல்லாளபட்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியவர் மற்றும் அவரது மனைவி மூக்கம்மாள் ஆகியோர் கீழே கிடந்த பணப்பையை கண்டெடுத்தனர். அதனை யார் தவற விட்டார்களோ என்று கருதி மேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பணம் நதியா தவறவிட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
கீழே கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த தம்பதிகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்
