
கேரளாவில் தொழிலாளியை கம்பியால் தாக்கிவிட்டு தப்பிய வாலிபர் கைது-தென்காசி பஸ் நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாரதி நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் நாக அர்ஜுன் (வயது 22).
இவரும், திருவனந்தபுரம் தெக்குபாரா ஆனந்த பவன் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(47) என்பவரும் கறி வெட்டும் கடையில் ஒன்றாக வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே அறையில் தங்கியிருக்கும் இவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக மது அருந்தியபோது, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த நாக அர்ஜுன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராதாகிருஷ்ணன் மயங்கி விழுந்ததால், நாக அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு தென்காசிக்கு பஸ்சில் தப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த கூத்தாட்டுகுளம் போலீசார் தென்காசி மற்றும் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி தென்காசி பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீசார், அங்கு சுற்றித்திரிந்த நாக அர்ஜுனை கைது செய்து கூத்தாட்டு குளம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.
