
முக்கிய சாலைகளை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும்
சோழவந்தானில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சோழவந்தான் நகரில் மாற்று வழியோ, புறவழிச் சாலையோ, அகலமான சாலையோ இல்லை. இதனால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் ஒரே நேரத்தில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது.
தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
1987-ம் ஆண்டில் மார்க்கெட் ரோடு ஒருவழி பாதையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது இருவழிப்பாதையாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட சில யோசனைகளை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்க்கெட் ரோடு வழியாக அனைத்து பஸ்களும் சோழவந்தான் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து அந்தந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இதேபோல் அங்கிருந்து வரும் பொழுது மாரியம்மன் கோவில் சன்னதி வழியாக வெளியேற வேண்டும். பஸ் நிலையத்தில் இருந்து எந்த கனரக வாகனங்களையும் மார்க்கெட் ரோடு வழியாக அனுமதிக்க கூடாது.
இதேபோல் மாரியம்மன் கோவில் சன்னதியில் இருந்து மேற்கே கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.
மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கக் கூடாது. மேலும் ஆட்டோ நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். வாடிப்பட்டி மற்றும் நகரில் இருந்து வரக்கூடிய பஸ்கள் வட்ட பிள்ளையார் கோவில் சென்று திரும்பி தபால் நிலையம் அருகே இருந்து பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பஸ் நிறுத்தங்களில் பஸ் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும். மேலும் பாரபட்சமின்றி அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
