
தொடரும் மோசடிகள் : ஆதார் பயோமெட்ரிக்ஸை பாதுகாப்பது எப்படி? ஏன் அவசியம் ?
AEPS எனப்படுகின்ற ‘ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை‘ (Aadhaar Enabled Payment System) என்பது ஒரு வங்கி வாடிக்கையாளர் ஆதாரை தனது அடையாளமாகப் பயன்படுத்தி தனது ஆதார் செயல்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணபரிவர்த்தனைகள் செய்வதற்கான ஒரு சேவைமுறையாகும். இந்த சேவையின் மூலம், வங்கிக் கணக்கின் விவரங்களை அறிதல், வங்கிக் கணக்கிலுள்ள பணயிருப்பை அறிதல், மற்ற வங்கி கணக்கிலிருந்து பணத்தைப் பெறுதல் மற்றும் பணத்தை அனுப்புதல் போன்ற அடிப்படை வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்க முடியும்.
ஆனால் இந்த AEPS முறை மூலம் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி அல்லது திருடப்பட்ட ஆதார் எண்களைக் கொண்டு பல்வேறு பண மோசடிகள் நடத்தப்படுகின்றன. இந்த மோசடியின் மூலம் OTP இல்லாமலே, ஆதார் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி பலர் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திலோ அல்லது ஆதார் செயலியிலோ பயோமெட்ரிக் அங்கீகாரங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
இது குறித்து பெங்களூரைச் சேர்ந்த சைபர்கிரைம் சிஐடி பிரிவு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க ஆதார் பயோமெட்ரிக்ஸை பாதுகாக்குமாறு சமீபத்தில் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Archive Link:
மேலும், UIADI-ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கமான Aadhaar பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “கூடுதல் பாதுகாப்பிற்காக, உங்கள் பயோமெட்ரிக்ஸை ஆதாரில் பூட்டலாம். நீங்கள் எப்போது அதைப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அப்போது அதைத் திறக்கலாம், பின்னர் நீங்கள் அதை மீண்டும் பூட்டிக் கொள்ள முடியும். இதற்கு mAadhaar செயலியைப் பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்ஸைப் பூட்டவும்/திறக்கவும் அல்லது இந்த இணைப்பை பயன்படுத்தவும்: https://resident.uidai.gov.in/bio-lock ” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
ஏதேனும் காரணத்திற்காக நீங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸை திறக்க நினைத்தால், அது 10 நிமிடங்கள் திறக்கப்பட்டு பின்பு மீண்டும் தானாகவே பூட்டிக்கொள்ளும். உங்கள் பயோமெட்ரிக் தகவல் பூட்டப்பட்டவுடன் எந்த அங்கீகாரத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியாது. இதன் மூலம் ஒரு பயனர் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்களை பயோமெட்ரிக்ஸ் பூட்டியிருக்கும் போது அங்கீகரிப்புக்காகப் பயன்படுத்த முடியாது. இந்த பாதுகாப்பு அம்சத்தின் மூலம், பயோமெட்ரிக் தகவல்களை அங்கீகரிக்காமல் பயன்படுத்துவதை நிறுத்தமுடியும்.
இவை இரண்டு வழிகளில் செயல்படுத்தப்படலாம்.
- MAADHAAR செயலி – இணைப்பு .
- அதிகாரப்பூர்வ இணையதளம்: uidai.gov.in
ஆதார் பயோமெட்ரிக்ஸைப் எவ்வாறு பாதுகாப்பது? - ஆதார் ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ அல்லது My Aadhaar செயலியைப் பயன்படுத்தி ‘Aadhaar Services‘ என்ற சேவையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இந்த ‘Aadhaar Services’ யைத் தொடர்ந்து, ‘Secure your Biometrics‘ என்ற சேவையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின்பு ‘Lock / Unlock Biometrics‘ என்பதைத் தேர்ந்தெடுத்து, தொடர்புடைய இடங்களில் கேப்ட்சா குறியீடு மற்றும் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
- ஆதார் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP-யை கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் நிரப்பவேண்டும்.
- அடுத்து, மெனுவிலிருக்கும் ‘Lock / Unlock Biometrics‘ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன் மூலம் உங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸ் பூட்டப்பட்டுவிடும். இதே வழிமுறைகளைப் பயன்படுத்தி தேவைப்படும் பொழுது மட்டும் உங்கள் பயோமெட்ரிக்ஸ் அங்கீகாரங்களை அன்லாக் செய்து கொள்ளலாம்.
இந்த சேவைகளை, யுஐடிஏஐ இணையதளம் (UIDAI website) அல்லது m-Aadhaar-இல் உள்ள ஆதார் பதிவு மையங்கள் (enrolment centre) மற்றும் ஆதார் சேவா கேந்திரா (ASK) என்ற சேவைகளின் மூலமும் மேற்கொள்ள முடியும்.
