
சென்னையில் கண்ணை கட்டும் டிராபிக்.. புதிய முயற்சியில் இறங்கிய போலீஸ்.. 2 இடத்தில் சக்சஸ்
கோவையில் உள்ளது போல், சென்னையில் சிக்னல்களை குறைத்து யூடர்ன் ஏற்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் இறங்கி உள்ளனர்.
கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல்களை காலி செய்து அதற்கு பதில் யூடர்ன்களை ஏற்படுத்தினார்கள். சிக்னல்கள் இல்லா கோவை என்கிற முனைப்பில் தேவையற்ற பல சிக்னல்களை குறைத்தார்கள். அந்த நடவடிக்கைக்கு கோவையில் நல்ல பலன் கிடைத்தது.
அதே முயற்சியை சென்னை மாநகர போலீசாரும் செய்துள்ளனர். ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால், கோவையைவிட சென்னையில் பலமடங்கு வாகன போக்குவரத்து இருக்கிறது.. சென்னையின் அனைத்து பகுதிகளுமே மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளாகும். இந்த சூழலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோவை திட்டத்தை செயல்படுத்தும் முன்பு அதற்கு ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு சிக்னல்களில் ஆய்வு செய்த நிலையில் சென்னையில் போக்குவரத்து சிக்னலில் நீண்ட நேரமாக காத்திருப்பதும் நெரிசலுக்கு காரணம் என்பதை போலீசார் கண்டறிந்தார்கள். அதேநேரம் சிக்னல்களில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது என்பது பற்றி ஆய்வு செய்த போது, சுமார் 65 சிக்னல்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும், சிக்னலை கடந்து நேராக செல்லும் வாகனங்கள் எத்தனை? வளைவில் திரும்பி செல்லும் வாகனங்கள் எத்தனை? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நேராக செல்லும் வாகனங்கள் அதிக அளவிலும் வளைவில் செல்லும் வாகனங்கள் குறைந்த அளவிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே கோவையில் உள்ளது போல் சென்னையில் சிக்னல்களை மூடிவிட்டு யூ வளைவில் திரும்புவதை தடுத்து அந்த வாகனங்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக சென்னை ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் தி.நகர் சிக்னல் ஆகிய இடங்களில் போலீசார் அமல்படுத்தி உள்ளாரகள்.
சென்னை மாநகர் முழுவதும் பல சிக்னல்களை அணைத்து விட்டு வாகனங்களை இயக்க முடியுமா? என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட 64 சிக்னல்களில் விரைவில் புதிய முயற்சிகளை போலீசார் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு யூடர்ன் எடுத்து செல்வது சில அசவுகரியங்களை ஏற்படுத்தினாலும், நேராக செல்வோருக்கு வசதியாகவே உள்ளதாக சொல்கிறார்கள்.
