
கடலூரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் தலைமையிலான போலீசார் இன்று காலை கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கடலூர் முதுநகர் பென்சனர் தெருவை சேர்ந்த புகழேந்தி (வயது 40) என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளுடன், ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
