
பாரபட்சம் காட்டுவதாக புகார்: விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதிகள் ரகளை
விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உள்பட 255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
10 அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் இருப்பதால் ஜெயிலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இவர்கள் சிறை அறையில் இருந்து வெளியே வரும்போது மற்ற அறையில் இருக்கும் கைதிகள் வெளி வருவதற்கு அனுமதியில்லை. பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கைதானவர்கள் தங்களது அன்றாட வேலைகளை முடித்து சிறை அறைக்கு சென்றபின் மற்ற கைதிகள் சிறை வளாகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் குறிப்பிட்ட கைதிகளுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றில் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் சிறையில் 5-வது அறையில் அடைக்கப்பட்டிருந்த வடிவேல் முருகன் என்ற கைதி பிளேடு வைத்திருப்பதாக ஜெயில் வார்டன்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கைதியிடம் சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. அதன் பின் கைதி வடிவேல் முருகன் நேற்று 3-வது அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு அவருடன் தங்கியிருந்த கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயில் வார்டன்களிடம் வாக்கு வாதம், ரகளையில் ஈடுபட்ட னர். மேலும் அவர்கள் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயில் போலீஸ் சூப்பிரண்டு ரமா பிரபா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட 27 கைதிகளை மதுரை ஜெயிலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை முதற்கட்டமாக 13 கைதிகள் மதுரை ஜெயிலுக்கு கொண்டு செல்ல போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். வேனில் ஏறிய ஒரு கைதி திடீரென தலையால் கண்ணாடியில் மோதி ரகளை செய்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதுடன் வேன் கண்ணாடியும் உடைந்தது.
அவருக்கு ஆதரவாக மற்ற கைதிகளும் கோஷமிட்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் 13 கைதிகள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக ஜெயிலில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதிகளின் ரகளை போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது
