Police Recruitment

குமுளி அருகே வங்கியில் கள்ளநோட்டை மாற்றிய வாலிபர் கைது- சென்னை கும்பலுக்கு வலை

குமுளி அருகே வங்கியில் கள்ளநோட்டை மாற்றிய வாலிபர் கைது- சென்னை கும்பலுக்கு வலை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு தனியார் வங்கியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கள்ளநோட்டு 2 வந்தது. இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பீர்மேடு போலீசில் தகவல் தெரிவித்தனர்.

டி.எஸ்.பி குரியன்ஜேக்கப் தலைமையிலான போலீசார் வங்கிக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து கள்ளநோட்டை மாற்றியது யார் என ஆய்வு செய்தனர். அப்போது வண்டிபெரியாறு பகுதியை சேர்ந்த சிபின்ஜேக்கப்(28) என்பவர்தான் கள்ளநோட்டுகளை மாற்றியது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் கள்ளநோட்டுகள் கிடைத்ததாகவும், அதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் புழக்கத்தில் விட்டதாகவும் தெரிவித்தார். அவரது வீட்டில் சோதனை செய்தபோது 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 20 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகள் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். அதன்படி இடுக்கி மாவட்டத்தில் 20 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கும்பலில் தொடர்புடைய நபர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இடுக்கி மாவட்ட போலீசார் மூலம் சென்னை காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து கள்ளநோட்டு கும்பலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.