அவனுகளை சும்மா விடக் கூடாது என நினைத்தேன்!'- கும்பகோணம் பாலியல் வழக்கில் இறுதிவரை போராடிய இன்ஸ்பெக்டர்பாலியல் செயலில் ஈடுபடும்போது அதை ஒரு வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினால் அந்தப் பெண் பயந்துகொண்டு வெளியே சொல்லமாட்டாள் என்ற எண்ணம் இதில் ஈடுபடும் நபர்களுக்கு உள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பயிற்சிக்காக வந்த வடமாநில இளம்பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேருக்கும், சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குள் வழக்கு விசாரணையில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளதால், இதில் பங்கெடுத்த போலீஸாரை அனைத்து தரப்பு மக்களும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியின் டெல்லி கிளையில் வேலை கிடைத்தது. இது தொடர்பான பயிற்சிக்காக கும்பகோணம் வந்த அந்த இளம்பெண்ணை நான்கு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக அந்தப் பெண் கும்பகோணம் போலீஸில் புகார் அளித்தார். குற்றச் சம்பவத்தின் வீரியத்தை அறிந்த போலீஸார் உடனடியாக விசாரணையில் குதித்தனர்.
இந்த வழக்கில் தொடக்கம் முதல் என்ன நடந்தது?’ எனப் போலீஸாரிடம் கேட்டோம். 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி இரவு 10 மணிக்கு அந்த இளம்பெண் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவர் ஆட்டோவில் ஏறி, தான் செல்ல வேண்டிய இடத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டிரைவரிடம் கூறியிருக்கிறார். ஆனால், அந்த டிரைவர் இளம்பெண் சொன்ன இடத்துக்குச் செல்லாமல் மாற்று வழியில் சென்றதால் சந்தேகமடைந்த அவர், `ஹெல்ப் ஹெல்ப்' எனக் கத்திக்கொண்டு ஆட்டோவில் இருந்து குதித்துவிட்டார்.அப்போது அந்தப் பெண்ணிடம், `நாங்கள் போலீஸ்' எனக் கூறிக் கொண்டு உதவுதாக குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார் கூறியுள்ளனர். அத்துடன், `நாங்கள் கொண்டு போய் விடுகிறோம்' எனக் கூறி அந்தப் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, இருட்டான பகுதிக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். மேலும், அவர்களின் நண்பர்களான புருஷோத்தமன், அன்பரசு ஆகிய இருவரையும் வரவழைத்துள்ளனர்.அதன் பின்னர் அந்த நான்கு பேரால் அந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்துள்ளது. அதன் பின்னர், இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகக் கூறி தாக்கியுள்ளனர். இதன்பின்னர், மற்றொரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை ஏற்றிவிட்டு, பின்னாலேயே சென்றுள்ளனர். இதற்கிடையில் அந்தப் பெண்ணின் ஏடிஎம் கார்டை மிரட்டி வாங்கி பணம் எடுக்கவும் முயன்றுள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை.பின்னர், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து மறுநாள் காலை காவல் நிலையத்துக்கு வந்து அந்தப் பெண் புகார் கொடுத்தார். அப்போது, `தனக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. நிச்சயம் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்' எனக் கூறி கதறியழுதார். இதையடுத்து, உடனடியாக விசாரணையில் இறங்கினோம்.அத்துடன் இதைச் செய்த நான்கு பேர் மற்றும் இதற்கு முதல் காரணமான ஆட்டோ டிரைவர் என 5 பேரைக் கைது செய்தோம். குற்றவாளிகளிடம் விசாரணை நடந்தது. பின்னர் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று தடயங்களைச் சேகரித்தோம். மேலும், பணம் எடுக்கச் சென்ற ஏடிஎம் மையத்தில் பதிவான காட்சிகளையும் பெற்றோம். அதன்பிறகு குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்கள், அதில் பதிவான டவர்கள் போன்ற ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தியதுடன் அதில் கண்டறியப்பட்ட துல்லியமான தகவல்கள் மற்றும் சாட்சிகள் கூறிய கருத்துகளைக் கொண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்தோம். தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது" என்கின்றனர் விரிவாக.குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதில் முக்கியப் பங்காற்றியவர், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார். அவரிடம் பேசினோம்.
பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த உடனேயே அவனுகளை சும்மா விடக் கூடாது என்ற நினைப்பு மட்டுமே மனதில் இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம். பின்னர் அந்தப் பெண் வாக்குமூலம் தந்ததுடன் ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேரையும் அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து அறிவியல்ரீதியாக செயல்பட்டு குற்றத்துக்கான தடயங்களைக் கண்டுபிடித்தோம். மேலும், இது தொடர்பாக 33 சாட்சிகளிடம் விசாரணை செய்ததுடன் 68 தடயங்களுடன் சுமார் 700 பக்கத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தோம்.இந்த நிலையில், சுமார் 300 நாள்களுக்கு மேலாக தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் இதன் விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன், சிம்கார்டு, ஆட்டோ உள்ளிட்ட 18 தடயங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து விசாரணை செய்து அறிக்கையைத் தாக்கல் செய்தோம். குற்றவாளிகள், `எங்களுக்கு வாழவேண்டிய சின்ன வயசு. அதனால் தண்டனையைக் குறைத்துக் கொடுங்க’ என்றனர். ஆனாலும் இந்த வழக்கில் நாங்கள் எதிர்பார்த்தபடி மிகப்பெரிய தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பாலியல் செயலில் ஈடுபடும்போது அதை ஒரு வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினால் அந்தப் பெண் பயந்துகொண்டு வெளியே சொல்ல மாட்டாள் என்ற எண்ணம் இதில் ஈடுபடும் நபர்களுக்கு உள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக வெளியே வந்து புகார் கொடுத்து சாட்சியும் சொல்லியிருக்கிறார். அவர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியில் தெரியாதவகையிலும் மீடியாவில் வராதபடியும் நாங்கள் பார்த்துக்கொண்டோம். அந்தப் பெண்தான் இந்த வழக்கின் வெற்றிக்கு முதல் காரணம்.இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோது மற்றொரு வழக்குக்காக வந்த குற்றவாளி ஒருவன் கதறி அழுதுவிட்டான். இது குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த வழக்கு சீக்கிரம் முடிவதற்கு உயர் அதிகாரிகள் பெரும் ஒத்துழைப்பைக் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்தால் எந்தக் குற்றவாளியும் தப்பிக்க முடியாது என்பதற்கு இந்த வழக்கே சாட்சி” என்றார் உறுதியான குரலில்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்