செங்கல்பட்டு அருகே பொக்லைன் இயந்திரத்தின் கொக்கி உரசி காஸ் டேங்கரில் கசிவு: துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி விபத்துக்குள்ளானது.
இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு மற்றும் மகேந்திரா சிட்டி ஆகிய தீயணைப்பு படை வீரர்கள் குழு பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை பாதுகாப்பாக மீட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பொக்லைன் இயந்திரத்தின் கொக்கியானது லாரி டேக்கரில் உரசி எரிவாயு கசிய தொடங்கியது. எனவே விபத்தை தவிர்க்க சாலையில் உள்ள அனைத்து மின்விளக்குளையும் உடனடியாக அணைத்த தீயணைப்பு வீரர்கள் டேங்கர் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தொடர்ந்து எரிவாயு கசிவு ஏற்படாதவாறு தடுத்து நிறுத்தினர். எனவே தீயணைப்பு வீரர்கள் மேற்கண்ட இந்த துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
