50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டு
சங்கரன்கோவில் வட்டம் குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜா என்பவரது 50 அடி ஆழமுள்ள கிணற்றிற்குள் மருதப்பபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் மகன் அர்ஜுன் (வயது13) என்பவர் தண்ணீர் குடித்துவிட்டு ஓரமாக நின்ற போது காற்றின் வேகத்தால் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். கிணற்றில் விழுந்த சிறுவன் மோட்டார் பம்ப் செட்டினுடைய பைப்பை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டான். சிறுவனின் சத்தம் கேட்டு அங்கு சென்று மகாராஜா பார்த்த போது சிறுவன் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரிந்துள்ளது. உடனடியாக கிணற்றின் படிக்கட்டு சரியாக இல்லாத காரணத்தினால் உதவிக்காக கிணற்றுக்குள் கயிற்றை அனுப்பினார். அதனை பிடித்துக் கொண்டு சிறுவன் இருந்துள்ளார்.
தொடர்ந்து சங்கரன்கோவில் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் விஜயசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டனர். பின்னர் அவரது தாத்தாவிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டாார். சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.